எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் பிரதிநிதிகள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைத்து , எமது மக்களின் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி உள்ளார்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் .
கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பரிணாமங்களுடன் விஸ்தரித்து பல இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளை வழங்கி நாட்டின் கொள்கை தீர்மானத்திலும் சந்தர்ப்பத்தை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அவர்களுடன் மலையக மக்களின் அபிவிருத்திக்கான சந்திப்பு இடம்பெற்றவேளையில் அதில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பிரதிநிதிகள் யாரும் பங்குகொள்ளாது அதனை தவிர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இன அடையாளம் எமது உரிமை. சிலர் இதனை இனவாதமாக மாற்றுவதாலேயே எமது நாடு இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளதாகவும் . இளம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் இதனை மாற்றி அமைப்போம் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.