அரசுக்கு சொந்தமான டெலிகொம் நிறுவனத்தின் திறைசேரிக்குரிய அனைத்து பங்குகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்குரிய பங்குகள் அனைத்தையும் இரகசியமான முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திறைசேரி, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், அரச வங்கிகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் டெலிகொம் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்குகள் இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பங்குகளை விற்பனை செய்வதால் கிடைக்கும் வருமானத்தை நிலையான கணக்கில் வைப்புச் செய்வதால், கிடைக்கும் வட்டி டெலிகொம் நிறுவனம் தற்போது பெற்றுவரும் இலாபத்தை விட பல மடங்கு அதிகம் என பங்கு விற்பனையுடன் சம்பந்தப்பட்ட தரகர்கள் கூறியுள்ளனர்.
இது சம்பந்தமான பேச்சுவார்த்தை கடந்த 16 ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதனடிப்படையில் டெலிகொம் நிறுவனத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான அனைத்து பங்குகளும் பிரதமரின் முழுமையான அனுசரணையுடன் விற்பனை செய்யப்பட உள்ளது உறுதியாகி இருப்பதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.