இலங்கையில் மேலும் 3 ஆயிரம் தாதியர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை நிலவும் பட்சத்தில் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் தாதியர் சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரம்புக்வெல்ல இந்த அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
அதன்படி, 2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 2ஆயிரத்து 500 தாதியர் பயிற்சியாளர்களையும், 500 தாதியர் பட்டதாரிகளையும் சேவையில் இணைத்துக் கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2019/2020 உயர்தரப் பிரிவில் தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை அழைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை செப்டம்பர் நடுப்பகுதிக்குள் வெளியிட சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், 2018/2019 உயர்தரப் பிரிவில் இருந்து மொத்தம் 3ஆயிரத்து 315 நபர்கள் தாதியர் பயிற்சிக்காக பதிவு செய்யப்பட்டனர், இதன் மூலம் இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, G.C.E உயர்தரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இளைஞர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இவ்வாறான வாய்ப்புகளுக்காக தொடர்ந்து உழைத்து வருவதாக சுட்டிக்காட்டியதுடன் இது போன்ற சூழ்நிலைகளை சரியாக புரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் சாதகமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தாதியர் சேவையில் ஏற்படும் இடமாற்றங்களுக்கு முறையான இடமாற்ற நடைமுறையை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள அதேவேளை தாதியர் சேவை தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.