
ஜா-எல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருள், பல தோட்டாக்கள், போலி முத்திரைகள் மற்றும் போலி தேசிய அடையாள அட்டைகள் என்பவற்றை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை சந்தேகநபர்கள் போதைப்பொருளை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பதற்கு தயாரான போது பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 2 கிராம் ஐஸ் போதைப்பொருளும் , 250 தோட்டாக்கள் அடங்கிய 5 பெட்டிகளும், 3 போலி தேசிய அடையாள அட்டைகளும், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் 15 போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் இலத்திரனியல் தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
31 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் கணேமுல்ல மற்றும் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி மஞ்சுள பிரசாத் ஹேமந்த என்ற பெட்ட மஞ்சுவின் நெருங்கிய கூட்டாளிகள் என்றும், அவரது போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.