சனத் நிஷாந்தவிற்கு எதிரான மனு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சமத் மொராயிஸ் ஆகியோரால் இந்த வழக்கு இன்று  காலை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இராஜாங்க அமைச்சரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, சாட்சியங்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம், சாட்சியங்களை ஆராய்வதற்கு பிரதிவாதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அரகலய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதில் நீதவான்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் 23 ஆகஸ்ட் 2022 அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக நீதித்துறையின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக இராஜாங்க அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசேன, விஜித் குமார மற்றும் இலங்கை நீதிச் சேவை சங்கம் ஆகியோரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply