தமது கடமைகளை நிறைவேற்றும் போது சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கவலை வெளியிட்டுள்ளது.
உயிருக்கு அஞ்சாமல் தமது தொழில்சார் கடமைகளை நிறைவேற்றும் சுதந்திரம் சட்டத்தரணிகளுக்கு இருக்க வேண்டும் என அதன் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி கலகெதர நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஒருவரால் பெண் சட்டத்தரணி ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பல சட்டத்தரணிகள் முன்னிலையாகி குறித்த பெண் சட்டத்தரணிக்கு நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டத்தரணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இன்றியமையாத ஒன்று எனவும் நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் அதிகாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.