காஸா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் தரைவழித் தாக்குதலில் பிணைக்கைதியாக ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த இராணுவ வீராங்கனை ஒருவரை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (ஒக்.30) இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த இரவில் ஓரி மெக்டிஷ் என்பவர் எமது ராணுவம் மேற்கொண்ட தரை வழித் தாக்குதலின்போது மீட்கப்பட்டுள்ளார். இவர் ஒக் டோபர் 7 தாக்குதலில் பிணைக்கைதியாக ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். ஓரிக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் நலமுடன் உள்ளார். தற்போது குடும்பத்தினரைச் சந்தித்தார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வீராங்கனை தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதிக்குள் தரை வழியாக ஊடுருவி வருகிறது. இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர்கள் உள்பட 230 பேர் பிணைக்கைதிகளாக ஹமாஸின் பிடியில் உள்ளனர்.
ஒக்டோபர் 7 தாக்குதலில் கடத்திச் செல்லப்பட்ட இவர்களில் நான்கு பேரை ஹமாஸ், கட்டார் அரசின் சமரசப் பேச்சுவார்த்தையால் விடுவித்தது.
இந்த நிலையில், தமது ராணுவத்தின் தரைவழி நடவடிக்கையால் வீராங்கனை ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆயினும், இதனை ஹமாஸ் குழு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (04)