2024ல் உணவுப் பணவீக்கம் மேலும் குறையும் என அரசு நம்புகிறது!

2024ஆம் ஆண்டில் உணவுப் பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகம்,மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை எவ்வளவு கட்டுப்படுத்த முடியும் என்பதை மதிப்பிடுவதற்கு உணவு உற்பத்தி தொடர்பான அறிக்கைகளை கோரியுள்ளதாக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

“நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை” எனும் தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் கருத்து தெரிவிக்கையில்;

உணவு விலை மற்றும் பாதுகாப்பு எங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகள். பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தேவையான அளவு வரிகளை வசூலிக்கவும், சர்க்கரை வரியை 25 காசுகளில் இருந்து 50ரூபாவாக உயர்த்துவது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பையும், 2024 ஆம் ஆண்டில் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதையும் புரிந்து கொள்ள நாங்கள் பணியாற்றி வருகிறோம். மீன்பிடி, விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சிடம் இருந்து அறிக்கைகளையும் கோரியுள்ளோம்.

அடுத்த ஆண்டு நுகர்வோருக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்க இந்தத் தகவல் எங்களுக்கு உதவும். நமது இறக்குமதித் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் இது உதவும்.

இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம், வரும் ஆண்டில் உணவுப் பணவீக்கத்தை மேலும் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், பண்டிகைக் காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இலங்கை, மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்கிறது. மேலும் உள்ளூர் உற்பத்தி மீண்டு வரும் வரை முட்டை இறக்குமதியைத் தொடர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply