அவென்பீல்ட் ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் விடுவித்துள்ளது.
அந்த நாட்டில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நீதிபதிகள் அமீா் ஃபரூக், மியான்குல் ஹஸன் ஔரங்கசீப் ஆகியோா் அடங்கிய அமா்வு வெளியிட்டுள்ள தீா்ப்பில், அவென்பீல்ட் வழக்கில் நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிரான முறையீட்டை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு திரும்பப் பெற்றுள்ளதால் அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்கும் கீழமை நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதி செய்தனா்.
பாகிஸ்தானின் 12 ஆவது, 14 ஆவது மற்றும் 20 ஆவது பிரதமராக பதவி வகித்து வந்த நவாஸ் ஷெரீஃப் (73), பனாமா ஆவண முறைகேடு தொடா்பான குற்றச்சாட்டில், உச்சநீதிமன்றத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.
அதனைத் தொடா்ந்து, அல்-அஜீஸியா உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் நவாஸ் ஷெரீஃபுக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 2018 இல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
சிகிச்சைக்காக கடந்த 2019 ஒக்டோபரில் லண்டனுக்குச் சென்ற நவாஸ் ஷெரீஃப் அங்கேயே தங்கிவிட்டாா். அவரை தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
அப்போது நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைமையில் ஆட்சி மீண்டும் அமைந்தது.
தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நவாஸ் ஷெரீஃப் கடந்த மாதம் நாடு திரும்பியிருந்தார். (04)