வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்படாத ஐந்தாவது சந்தேகநபர்!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் நேரடி சாட்சியாளர் கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் ஐந்தாவது சந்தேகநபர் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றின் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.

அந்நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் கடந்த 24ஆம் திகதி, நீதிமன்றில் சாட்சியம் அளிக்கும் போது , தன்னையும் ,உயிரிழந்த மற்றைய இளைஞனையும் சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸாரை அடையாளம் காட்ட முடியும் என கூறி , இருவரின் பெயர்களை குறிப்பிட்டு அடையாளம் காட்டியதுடன் , ஏனைய மூவர் தொடர்பில் அவர்களின் அங்க அடையாளங்களை கூறி , அடையாளப்படுத்தியிருந்தார்.

அதனை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை , நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு , நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இளைஞன் சாட்சியம் கூறி 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஐந்தாவது சந்தேகநபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

அதேவேளை உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply