இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை , இராணுவம் மற்றும் கடற்படையுடன் இணைந்து மேலும் 1,133 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக 54 சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
யுக்திய விசேட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சுற்றிவளைப்பில் 405 கிராம் ஹெரோயின், 1 கிலோ ஐஸ், 1,946 போதை மாத்திரைகள், 4.7 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 27,868 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் மீள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 86 பேரும் உள்ளடங்குவர்.
இலங்கை பொலிஸாரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக (0718598800) எனும் அவசர தொலைபேசி இலக்கத்தை
அமைத்துள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் இந்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற தொடர்புடைய குற்றங்களை இல்லாதொழிக்கும் முயற்சியில், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், நாடளாவிய ரீதியில் 2023 டிசம்பரின் இறுதியில் யுக்திய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.