உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் இன்று காலையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது உயிர்நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 9 தமிழர்கள் படுகொலை  செய்யப்பட்டனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, பொலிஸாரை அனுப்பிக் கலவரத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply