குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பத்து சிவில் சமூக ஆர்வலர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று பிற்பகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர்கள் நேற்று மாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரம்புக்வெல்ல நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகவிருந்த போதிலும், மற்றுமொரு வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக வேண்டியிருந்தமையால் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகத் தவறியிருந்தார். இதனால் அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வேறு திகதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்னகாயேவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று மாலை அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.