நாடு தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் முன்னர் பகிரப்பட்டிருந்த 42,000 க்கும் மேற்பட்ட தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் மேலும் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர்களை இலங்கை பொலிஸார் சேர்த்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கும் போதைப்பொருள் வலையமைப்புகளை ஒடுக்குவதற்கும் கடந்த 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை நாடளாவிய ரீதியில் மேலும் தொடரும் என பொலிஸ் தலைமையகம் உறுதியளித்துள்ளது.
இதன்படி, புதிதாக அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 296 பேரின் பெயர்கள் மற்றும் அண்மையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 53 பேரின் பெயர்கள் நாட்டிலுள்ள பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும், பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், யுக்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று மதியம் 12.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர சாளரத்திற்குள் மேலும் 705 சந்தேக நபர்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, இந்த 24 மணி நேர சாளரத்தின் போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 143 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ், 2.88 கிலோ கஞ்சா மற்றும் 255 போதை மாத்திரைகள் உள்ளடங்குகின்றன.