நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையில் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 663 சந்தேக நபர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 547 சந்தேக நபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 116 பேர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 14 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 95 பேருக்கு எதிராக போதைப்பொருள் அல்லாத குற்றங்களுக்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, போதைப்பொருள் சந்தேக நபர்களில் 2 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், மேலும் 2 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 175 கிராம் 191 மில்லிகிராம் ஹெரோயின், 171 கிராம் 197 மில்லிகிராம் ஐஸ், 515 கிராம் 538 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 807 கஞ்சா செடிகள் உள்ளடங்குவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.