58 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்கத்துடன் துப்பரவு பணியாளர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனியார் துப்பரவு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரால் விமான நிலையத்திற்கு வெளியே கடத்தப்பட்ட சுமார் ரூபா 58 மில்லியன் ரூபா பெறுமதியான ஜெல் வடிவிலான தங்க நகைகள் மற்றும் தங்கத்தின் இருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண் வெயங்கொட மிரிடியலந்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்உள்ள சுங்கவரி இல்லாத வர்த்தக நிலையத்தின் கழிவறை ஒன்றில் அடையாளம் தெரியாத பெண்மணியொருவர் தங்கம் அடங்கிய பொதியை தன்னிடம் கொடுத்ததாக சந்தேகத்திற்குரிய பெண் இலங்கை சுங்கத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், பொதியை கொடுத்த பெண், விமான நிலைய வளாகத்திற்கு வெளியே ஒரு நபரிடம் குறித்த பொதியை ஒப்படைத்த பிறகு ரூபா 60,000 தனக்கு கொடுப்பதாக உறுதியளித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தில் 1.4 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 1.35 கிலோ கிராம் தங்கம் ஜெல் வடிவில் உள்ளடங்குவதாக இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply