அரச வங்கிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!

அரசுக்கு சொந்தமான வங்கி நிறுவனங்கள் தொடர்பாக முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்  வழங்கியுள்ளது.

அரசுக்குச் சொந்தமான வங்கி நிறுவனங்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, இடர் முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் நிலவுகின்ற பலவீனங்கள் காரணமாக, சமீபத்திய பொருளாதார நெருக்கடிகளின் போது வங்கிகள் கடுமையான பின்னடைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இவ்வாறான சிரமங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவினால் வங்கிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல சீர்திருத்தங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்கமைய, சர்வதேச நாணய நிதியம் வழங்கிய விரிவான நிதி வசதித் திட்டத்தில் உள்ளடங்கிய தேவைகள் அடிப்படையிலும், உலக வங்கியால் நடைமுறைப்படுத்தப்படும் வளர்ச்சிக் கொள்கை நடவடிக்கைகளின் அடிப்படையிலும் மேற் கூறப்பட்ட சீர்திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமையவே, இந்த சீர்திருத்த முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply