அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக மொத்தமாக 107 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தெமட்டகொடை விற்பனை நிலைய திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, 27 இலட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பத்து கிலோ அரிசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள மொத்த குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த நிவாரணங்களை பெறுவார்கள் எனவும் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதேவேளை, பொருளாதாரம் நல்லதொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், வாகன இறக்குமதி தொடர்பில் நம்பிக்கை வைக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.