ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திலிருந்த ஆவணங்களை ரகசியமாக எடுத்துச் சென்றதாக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மீது குற்றம் சுமத்திய கட்சியின் ஊடகச் செயலாளர் திசர குணசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டு ஒன்பது மாதங்களுக்கும் மேலாகியுள்ளதாகவும், அந்தக் காலப்பகுதியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சி அலுவலகத்திற்குச் செல்லவில்லை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இருப்பை அழிக்க முற்படும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சார்பான குழுவைச் சேர்ந்த திசர குணசிங்க தெரிவித்துள்ள இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகச் செயலாளர் திசர குணசிங்கவின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்டபோதே தயாசிறி எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருந்தால் இவ்வாறு கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்க மாட்டார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.