டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று காலை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘மன்ன ரமேஷ்’ என அழைக்கப்படும் ரமேஷ் பிரியஜனக்கவை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைக்க பொலிஸாரால் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘மன்ன ரமேஷ்’ என அழைக்கப்படும் பாதாள உலகக் குற்றக் கும்பலின் தலைவன் ரமேஷ் பிரியஜனக, துபாயிலிருந்து இன்று காலை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அதிகாரிகள் குழுவினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தேடப்படும் பாதாள உலக பிரமுகருடன் வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழு இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயில் ‘மன்னா ரமேஷ்’ என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான ரமேஷ் பிரியஜனக கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு மார்ச் 6ஆம் திகதி தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேடப்பட்டு வந்த குற்றவாளியை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு துபாய் பொலிஸாரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
‘மன்னா ரமேஷ்’ துபாயில் தங்கியிருந்து பல குற்றங்களைத் திட்டமிட்டு நடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பலின் தலைவனாகச் சந்தேகிக்கப்படும் அதேவேளை, அவிசாவளை பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காக இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வருபவர்.
கொலைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுக்கு பாதாள உலகக் கும்பல் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.