தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினா கசிவு தொடர்பில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

அண்மையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர் குழுவொன்று இன்று (18) காலை பரீட்சைகள் திணைக்களத்திற்கு முன்பாக பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களை தாள் குறியிடும் நடவடிக்கையின் போது புறக்கணிக்க முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்குப் பதிலாக செப்டம்பர் 15ஆம் திகதி நடத்தப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முழுவதையும் இரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.

இதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல பெற்றோர்களுக்கு கடிதம் கையளிப்பதற்காக பரீட்சை திணைக்களத்திற்குள் நுழைய வாய்ப்பு வழங்கப்பட்டது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்தப் பிரச்சினையை இலகுவாக எடுத்துக் கொண்டதாகக் கூறி அவர் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற பல போராட்டங்கள் பதிவாகியுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 அன்று நடைபெற்றதுடன் மொத்தம் 323,879 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு அமர்ந்திருந்தனர்.

எவ்வாறாயினும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் உள்ளதைப் போன்ற மூன்று கேள்விகள் மாதிரிப் பரீட்சை வினாத்தாள் மூலம் இணையத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இணையான மூன்று வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாளை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளை தயாரித்த குழுவானது கலந்தாலோசிப்பதற்காக செப்டெம்பர் 17ஆம் திகதி கூடி, அது தொடர்பான மூன்று வினாக்களை விசாரணைக்கு உட்படுத்தி நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply