வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் 6 மற்றும் 7ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில், ஆசிரியர் ஒருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
ஜனவரி 10ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டிருந்த 6 மற்றும் 7ஆம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாளை சமூக ஊடகங்களில் கசியவிட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது ஆசிரியர் ஒருவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார். அத்துடன் கசிந்ததாக கூறப்படும் பரீட்சை வினாத்தாள்கள் மீண்டும் தயாரிக்கப்படும் எனவும் குறிப்பிடுள்ளார்.