நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், வலுவான சுகாதார கட்டமைப்பு உள்ள நாடுகள் கூட தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. ஆயினும், நியூசிலாந்து நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்தியதால் நியூசிலாந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டிற்கு வருபவர்கள் சிலருக்கு தொற்று உறுதியாகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் முறையாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், 102 நாட்களுக்குப் பிறகு இன்று புதிதாக ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருடன் அங்கு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆகியுள்ளது. இவர்கள் அனைவரும் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டவர் ஜூலை 30ம் தேதி மெல்போர்னில் இருந்து நியூசிலாந்திற்கு வந்தார் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்பீல்ட் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: 20 வயதான அந்த இளைஞர், தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தார். தங்கியிருந்த மூன்றாம் நாளில் அவருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில் நெகடிவ் என வந்தன. ஆனால் ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவாக மாறின. இப்போது அவர் ஆக்லாந்து தனிமைப்படுத்தப்படும் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதனுடன் நியூசிலாந்தில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,220 ஆனது. எனினும் இவர்களில் யாரும் தற்போது மருத்துவமனை அளவிலான சிகிச்சை பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.