இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிரான வெற்றியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நினைவுப் பதக்கமொன்றை வழங்கியுள்ளார்.
வட கொரிய பிராந்தியத்தில் இறந்த சோவியத் வீரர்களின் நினைவைப் பாதுகாப்பதில் அவர் வகித்த பங்கிற்காக இந்த பதக்கம் வட கொரிய தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பியோங்யாங்கில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
பதக்கம் வழங்கும் நிகழ்வில், வடகொரியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் மட்ஸ்கோரா, இந்த விருதை வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சன் வான்னுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில், ரஷ்ய மற்றும் வட கொரிய அதிகாரிகள் முகமூடி அணிந்திருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த விருதைப் பெற வடகொரிய தலைவர் கிம் ஜோங், வருவதாக முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அவர் வரவில்லை. இதற்கு தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
கடந்த 1941ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை நடந்த ‘கிரேட் பேர்டியாட்டிக் வோர்’ எனும் போரில் அடைந்த வெற்றியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 9ஆம் திகதி தலைநகர் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை ரஷ்ய அரசு நடத்தும்.
ஆனால், இம்முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு அணிவகுப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இரத்து செய்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு செஞ்சதுக்கத்தில் நடந்த அணிவகுப்பை காண வடகொரிய தலைவர் கிம் ரஷ்யாவுக்கு செல்வதாக இருந்தது. ஆனால், இறுதி தருணத்தில் உள்நாட்டு விவகாரங்களை மேற்கோள் காட்டி அந்தப் பயணத்தை அவர் ரத்து செய்தார். 70ஆவது ஆண்டு விழாவிற்கு இதேபோன்ற அழைப்பை 2015ஆம் ஆண்டு வட கொரிய தலைவர் நிராகரித்தார்.
இந்த போரின்போது, வடகொரியாவில் 1,375 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவிடம் டிபிஆர்கே எனும் நினைவிடத்தில் எழுப்பப்பட்டுள்ளது. சோவியத் வீரர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதைக்கப்பட்ட அந்த நினைவிடத்தை இன்னும் வடகொரியா பாதுகாத்துப் பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.