ரஷ்யாவின் இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாள் கொண்டாட்டம், பாரம்பரிய இராணுவ அணிவகுப்பு இல்லாமல் சாதாரணமாக நடைபெற்று முடிந்துள்ளது. எனினும், மாஸ்கோவின் வான் பரப்பை ரஷ்யாவின் அதிநவீன விமானங்கள் அலங்கரித்தன.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜேர்மனி நாசிப் படையை ரஷ்யாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி தோற்கடித்தன. இந்தநாள் ரஷ்யர்களின் வெற்றிநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
கடந்த 1941ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை நடந்த ‘கிரேட் பேர்டியாட்டிக் வோர்’ எனும் போரில் அடைந்த வெற்றியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 9ஆம் திகதி தலைநகர் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை ரஷ்ய அரசு நடத்தும்.
ரஷ்யாவின் ஆயுத வலிமையை வெளிப்படுத்தும் வகையாக இராணுவ அணிவகுப்புகளும், அணு ஆயுதங்கள், போர் விமானங்கள் உட்பட பல்வேறு நவீன ஆயுதங்களின் அணிவகுப்புகள் நடைபெறும்.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்பது வழக்கம். அத்துடன் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
ஆனால், இம்முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வெற்றிநாள் கொண்டாட்டம் சாதரணமாக நடைபெற்றது.