இந்த வருட இறுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் வெடிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’ என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸைக் கண்டு மொத்த உலகமும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது.
அனைத்து நாட்டு எல்லைகளும் மூடப்பட்டு, மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அங்கு, நாளுக்குநாள் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருவதால், அந்நாட்டு அரசாங்கம் செய்வதறியாது திணறிவருகிறது.
ஆனால், வைரஸால் முதலில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சீனாவும், இரண்டாவதாகப் பாதிக்கப்பட்ட தென்கொரியாவும் தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டன.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தென்கொரியா 2-வது இடத்திலிருந்தது. ஆனால், தற்போது அந்த நாடு 10,000-த்துக்கும் அதிகமான பாதிப்புகளுடன் பின்னுக்குச் சென்றுவிட்டது. தென்கொரியாவின் துரித மற்றும் கடுமையான நடவடிக்கையே அங்கு வைரஸின் பரவல் குறைந்ததற்குக் காரணமாக கூறப்படுகிறது.
வைரஸ் வெடிப்புக்கு மத்தியில், அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலும் வெற்றிகரமாக நடந்துமுடிந்து, தற்போது அங்கு பொதுமக்கள் தங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகின்றனர். அங்கு, ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தனி நபர் இடைவெளியுடன் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வருட இறுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் பெரிய அளவில் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்.
நேற்று தன் நாட்டு மக்கள் மத்தியில் உரையாடிய தென்கொரிய அதிபர், “தென் கொரியாவில் கடந்த வாரங்களில் எந்த வைரஸ் பாதிப்பும் உறுதிசெய்யப்படவில்லை, இதனால் நாட்டில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுவருகிறது. ஆனால், சமீப நாள்களில் சியோலின் இட்டாவேன் மாவட்டத்தில், நம் சுகாதார அதிகாரிகள் சில புதிய வைரஸ் கேஸ்களைக் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் எப்போது, எங்கு வரும் எனக் கூறமுடியாத நிலை உருவாகியுள்ளது.
இதேபோன்ற சூழ்நிலை வருங்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம். அதிலும் குறிப்பாக, கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் மிகவும் வேகமாகப் பரவும். எனவே, மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த வருட இறுதியில், கொரோனா வைரஸ் மீண்டும் பெரிய அளவில் வெடிக்க வாய்ப்புள்ளது. அதனால், தொற்று நோய் தடுப்பு தொடர்பாக எந்த பாதுகாப்பையும் நாம் குறைக்கக்கூடாது. வைரஸைக் கண்டு பயம்கொள்ளத் தேவையில்லை. முறையான வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தால், வைரஸ் பரவலை நிச்சயம் தடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் 256 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 10,874 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களில் 9,610 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் 10,128 பேருக்கு புதிதாக வைரஸ் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.