அரச உயர் பதவிகளுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை பார்க்கும் போது இந்த சமிஞ்சை சற்று சறுக்கலாகவே இருக்கிறது. இதனை சரியான விடயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் பிரதி அமைச்சரும், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று இந்த அரசாங்கம் பல அரச உயர் பதவிகளுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை பார்க்கும் போது இந்த சமிஞ்சை சற்று சறுக்கலாகவே இருக்கிறது. இது சரியான ஒன்றாக எமக்கு படவில்லை. இது சம்மந்தமாகவும் எதிர்காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் பேசி இராணுவ மயமாக்கல் இலங்கையில் நடைபெறுவதை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்கும் எமது முயற்சிகளை மேற்கொள்வோம்.
அதுமட்டுமல்ல, பல விடயங்களில் வன்னி மண்ணில் மாற்று சமூகத்தை நாம் மதிக்கும் அதேவேளை, விகிதாசாரத்திற்கேற்ப அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டுமே தவிர, கடந்த காலத்தில் தமிழ் மக்களை விட ஏனைய மாற்று சமூகங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டன. உயர் அதிகாரிகளாக மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டு எமது வன்னி மண் காப்பாற்ற பட வேண்டும். பலாக்கார குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கொரோனா வைரஸ்சிற்கு பின்னரான நிலையில் ஒரு இறுக்கமான அரசாங்கம் எமது நாட்டிக்கு இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதேநேரம் சமூக அதிகாரிகளாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை சரியான விடயமாக நான் பார்க்கவில்லை. அதேவேளை, எமது நாட்டின் இறைமை காப்பற்றப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அந்தவகையில் ஜனாதிபதி அவர்கள் மிகவும் திட சங்கற்பமாக தனது உரையில் தெளிவாக சொல்லியிருக்கிறார். வெளிநாட்டு அழுத்தங்களின் மூலம் எதனை சாதிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.