பெரும் சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது என அறியமுடிந்தது.
மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் திகதியில் மாற்றம் ஏற்படும் என ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எந்தவித சாத்தியமும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மேலும் 70 நாட்கள் தமக்குத் தேவைப்படுவதால் செப்டெம்பர் மாதம் வரையில் தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளனர்.
எனினும், நாடாளுமன்றக் கலைப்பு, பொதுத்தேர்தல் திகதி ஆகிய வர்த்தமானிகளை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணையின் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் இது குறித்து வெளிப்படையான இறுதி முடிவு ஒன்றை எடுப்பது எனவும் இன்றைய சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.