போர் வெற்றி விழா பொருத்தமற்றது – மங்கள தெரிவிப்பு

போரிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டுமொரு போர் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே நாம் செயற்படவேண்டும். மாறாக போர் வெற்றியைக் கொண்டாடுவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது” என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். போர் முடிவடைந்த பின்னர் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று மூவின மக்களையும் ஐக்கியப்படுத்தியிருக்கவேண்டும். இதனைச் செய்யாமல் இனவாத ஆட்சியையே அன்றைய வெற்றியாளர்கள் முன்னெடுத்தனர்.

ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் வந்து, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்துவருகின்றனர். ஆக, இது கொண்டாடக்கூடியதொரு வெற்றி அல்ல.

இலங்கையில் நடைபெற்றது உள்நாட்டு போராகும். இரு தரப்புகளிலும் இலங்கையர்களே கொல்லப்பட்டனர். இராணுவத்தினரும் எமது பிள்ளைகள்.

அதேபோல் பிரபாகரனின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, ஏமாந்து வடக்கில் உயிரிழந்த இளையோரும் இலங்கையர்கள்.

எனவே, போரில் இருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு, இந்த நாட்டில் மீண்டுமொரு முறை போர் ஏற்பாடாமல் இருக்கும் வகையில் செயற்படவேண்டிய தருணம் இது” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir