கோட்டாபய வீராப்புப் பேசலாம்; பாதிப்பு இலங்கைக்கே – சுரேஷ்

இலங்கை அரசு சர்வதேச அமைப்புக்கள் நிறுவனங்களிலிருந்து விலகினால், அந்த அமைப்புக்கள் நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. சகல பாதிப்புக்களும் இலங்கைக்குத்தான். என ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

படையினரைக் கெளரவிக்கும் போர் வெற்றி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய கோட்டாபய, படையினருக்கு அழுத்தம் கொடுத்தால் சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கை விலகும் என்று தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது:-

“இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருந்தனர். ஐ.நா. சபைக்கும் இது தெரியும். இது தெரிந்தமையால்தான் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. ஆராய்ந்திருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இலங்கையின் ஜனாதிபதி என்ன சொன்னாலும் நடந்து முடிந்த போரில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன. அதை மறுக்க முடியாது. அவற்றுக்குப் பொறுப்புக் கூறுவதற்குப் பதிலாக, பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து விலகப் போவதாக இலங்கை கூறுகின்றது.

அவ்வாறு விலகுவதால் இலங்கைக்குத்தான் இழப்பு ஏற்படும். இலங்கை போன்ற சிறிய நாடு ஐ.நா. அமைப்பிலிருந்து விலகுவதாக எடுத்துக்கொண்டால், ஐ.நா. அமைப்புக்கு எந்தப் பாதிப்பும் வராது. இலங்கைக்குத்தான் பாதிப்பு வரும்.

ஜனாதிபதி கோட்டாபய வீராப்புப் பேசலாம். ஆனால், உலக நியமங்கள், நடப்புக்களை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளத் தவறினால் அதற்கான விலையையும் அவர்களே கொடுத்தாக வேண்டி ஏற்படும். ஜனாதிபதி என்கின்ற பொறுப்பான பதவியிலிருப்பவர் தான் என்ன பேசுகின்றேன் என்பதைப் புரிந்துகொண்டு பேசினால் நல்லது” – என குறிப்பிட்டுள்ளார் .

You May Also Like

About the Author: kalaikkathir