நாடாளுமன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அக்கறை கிடையாது. தேர்தலைப் பிற்போடும் எதிர்த்தரப்பினரது நோக்கத்துக்கு ஆதரவாகவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகின்றது என மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றஞ்சாட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அரசின் செயற்பாடுகளுக்கு அரச நிறுவனங்கள் தங்களது சேவைக்கு அப்பால் சென்று ஒத்துழைப்பு வழங்கின.
பொதுத்தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பொதுத்தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்த முடியும் எனக் குறிப்பிட்டபோதும் தேர்தல்கள் ஆணையாளர் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைக்கூட முன்னெடுக்கவில்லை.
பொதுத்தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குவுக்குக் கிடையாது. தேர்தலைப் பிற்போட எதிர்த்தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே ஆணைக்குழு செயற்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வைரஸ் சமூகத் தொற்றாக பரவல் அடையவில்லை. ஆகவே, தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார தரப்பினரது பரிந்துரைக்கு அமைய செயற்படுவது அவசியமாகும்” – என்றார்.