தமிழருக்குத் தீர்வு கிடைப்பதை கோட்டாவால் தடுக்க முடியாது – சம்பந்தன்

“சர்வதேசம் எங்களைக் கைவிடாது என்று நம்புகின்றோம். சர்வதேசம் எங்களைக் கைவிடாமல் செயற்படுவதற்குத் தேவையான அழுத்தங்களைக் கொடுக்கின்றோம்; கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். எனவே, உண்மையின் அடிப்படையில் – நீதியின் அடிப்படையில் – நியாயத்தின் அடிப்படையில் – சமத்துவத்தின் அடிப்படையில் தமிழருக்கு ஒரு தீர்வு கிடைப்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் தடுக்க முடியாது. எவராலும் தடுக்க முடியாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சூரியன் எப்.எம். வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’ நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்தை அதிகமாக நம்பி இருக்கின்றது எனத் தெரிகின்றது. ஆனால், இம்மாதம் 19ஆம் திகதி நடைபெற்றிருந்த இலங்கை இராணுவத்தின் போர் வெற்றி விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றும்போது, சர்வதேச அமைப்புகள் இலங்கை மீது அழுத்தங்களைத் தொடர்ந்து பிரயோகித்தால் அந்த அமைப்புகளிலிருந்து வெளியேறுவதற்குக்கூட தயங்கமாட் டோம் என்று தெரிவித்திருந்தார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?’ என்று இந்த நிகழ்ச்சியில் இரா.சம்பந்தனிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது:-

“எமது மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவர்களும் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எமது மக்கள் நீண்டகாலமாக எமது கொள்கைகளில் நம்பிக்கை வைத்து – எங்களை ஆதரித்து எங்களைப் பெருமளவில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தங்களுடைய ஏகப்பிரதிநிதிகளாக எங்களைத் தெரிவுசெய்திருக்கின்றார்கள். அதுதான் எமது முதல் பலம் – முதல் தைரியம். அந்தப் பலத்தில்தான் மற்றவையெல்லாம் தங்கியிருக்கின்றன. மக்களை நாம் நம்புகின்றோம். சர்வதேசம் எங்களைக் கைவிடாது என்று நம்புகின்றோம். சர்வதேசம் எங்களைக் கைவிடாமல் செயற்படுவதற்குத் தேவையான அழுத்தங்களைக் கொடுக்கின்றோம்; கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். தொடர்ந்தும் கொடுப்போம். கூடியளவு விரைவில் கொடுப்போம்.

ராஜபக்சக்களைப் பொறுத்த வரையில் விசேடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பொறுத்தவரையில் அவர் பதவிக்கு வந்தது பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளுடன் மாத்திரம்தான். சிறுபான்மை இன மக்கள் மத்தியில் அவர் பிரசாரம்கூடச் செய்யவில்லை. ஜனாதிபதியாக வருவதற்கு சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை அவர் கேட்கவில்லை; பெறவில்லை. அவரை நம்பி நாங்கள் நிற்கவில்லை. அவர் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை உண்மையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்.

உண்மையின் அடிப்படையில் – நீதியின் அடிப்படையில் – நியாயத்தின் அடிப்படையில் – சமத்துவத்தின் அடிப்படையில் தமிழருக்கு ஒரு தீர்வு கிடைப்பதை அவரால் தடுக்க முடியாது. எவராலும் தடுக்க முடியாது. அது எங்களுடைய அடிப்படை உரிமை. தமிழ்பேசும் மக்கள் – விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அது எங்களுடைய அடிப்படை உரிமை. அந்த உரிமையை எவரும் மறுக்க முடியாது. அதை நாங்கள் பெறுவோம்” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir