உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றி!

பொதுத்தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் ஜனநாயகத்துக்கும் மக்களின் வாக்களிக்கும் உரிமைக்கும் கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றியாகும். இதனால் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“தேர்தலுக்குப் பயந்துகொண்டிருந்த எதிரணியினருக்கு இந்தத் தீர்ப்பு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ள நிலையில், பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிரணியினர் தங்கள் உள்வீட்டுப் பிரச்சினையை சமாளிக்க முடியாத நிலையிலும், தேர்தல் தோல்வியை எதிர்கொள்ளத் திராணியற்ற நிலையிலும் கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி தேர்தல் வேண்டாம் என்று வலியுறுத்தி உயர்நீதிமன்றம் சென்றனர். இந்தநிலையில், அவர்களின் சுயலாப அரசியல் முயற்சியை உயர்மன்றத்தின் தீர்ப்பு தோல்வியடையைச் செய்துள்ளது.

நாம் எதிரணியில் இருந்தபோதும் தேர்தலுக்குப் பயப்படவில்லை. தற்போது ஆளுந்தரப்புக்கு வந்தபோதும் தேர்தலுக்குப் பயப்படவில்லை. ஆனால், எதிரணியினர் ஆளுந்தரப்பில் இருந்தபோதிலும் தேர்தலுக்கு அச்சமடைந்தனர். இப்போது எதிர்த்தரப்பில் இருக்கின்ற போதிலும் தேர்தலுக்குப் அச்சமடைகின்றனர். இப்படியானவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை நாட்டு மக்கள் ஒருபோதும்  வழங்கமாட்டார்கள்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் எம்மை வெற்றியடையச் செய்வார்கள்” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir