ராஜபக்ச ஆட்சி தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் – சஜித் அணியினர்

நாட்டு மக்கள் அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு முன்னர் ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சி தொடர்பில் சிந்திக்க வேண்டும். அது தொடர்பில் தீர்மானம் எடுத்த பின்னரே வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக்க அபேசிங்க வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரையில் புதிய நாடாளுமன்றம் நியமிக்கப்படாமல் ஆட்சி இடம்பெற்று வருகின்றது. இதனால் இந்தக் காலப்பகுதி நாடாளுமன்றம் செயற்படாமல் ஆட்சி இடம்பெற்ற காலப்பகுதியாக வரலாற்றில் பதியப்படும். தற்போது இடம்பெறும் ஆட்சி முறை ஜனநாயக பண்புமிக்கதா? அல்லது அரசமைப்புக்கு அமைவானதா? அல்லது சர்வாதிகாரமானதா? என்பது தொடர்பில் மக்களே சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை உருவாக்குவதற்காகப் பெரும் பங்காற்றியவர்களே இன்று அரசின் போக்கை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

மத்திய வங்கியின் நிதி முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர்களான நிஹால் பொன்ஷேகா, துஷ்டி வீரகோன் ஆகியோர் தங்களின் பதவிகளைத் துறந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் நிதி முகாமைத்தும் முறையாக இடம்பெறாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசின் தலையீட்டின் காரணமாகவே இவ்வாறு தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் தங்களது பதவியிலிருந்து விலகுகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனைவருக்கும் பொதுவாக சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என்கிறார். ஆனால், இந்தப் பொதுவானச் சட்டத்தின் செயற்பாடு தொடர்பில் அண்மையில் ஒரு விடயத்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மரண நிகழ்வில் இந்தப் பொதுவானச் சட்டம் எவ்வாறு இயங்கியது என்பது தொடர்பில் மக்கள் தெளிவுற்றிருப்பார்கள்.

தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஒளடதங்களுக்கு விலைக்கட்டுப்பாடு இல்லை. அரச ஊழியர்களின் ஊதியத்திலிருந்து அரைப்பகுதி அவர்களுக்கு அறிவிக்காமலே அரசால் அபகரிக்கப்பட்டுள்ளது.

உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் அதன் பயன்கள் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. தனியார் துறையைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்குத் தொழில் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிய இடர்மிகு தருணத்தில் நாடு உள்ளது.

தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியது போன்று நாங்களும் மக்களிடம் இப்போது நலமா? என்று கேட்கின்றோம். நலம் என்றால் எதிர்வரும் பொதுத்தேர்தலின்போதும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று ஜனாதிபதித் தேர்தலின்போது அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்த 69 இலட்சம் மக்களிடம் நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாடே பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ள நிலையில் வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பல மில்லியன் ரூபாய்களை கடனாகப் பெறுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இந்தக் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இது அவசியம்தானா?

இதேவேளை, அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகமவில் விளையாட்டு அரங்கை அமைப்பதென உறுதியாக இருக்கின்றார். பொதுத் தேர்தலை நடத்துவதற்காகக் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்றால், நாம் எதற்காக முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் திருப்தியற்ற செயற்பாடுகள் தொடர்பில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும். அரசின் செயற்பாடுகளை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று எண்ணியே அது செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் அவற்றை நினைவுபடுத்துகின்றோம். நாட்டு மக்களே சிந்தித்துத் தீர்மானம் எடுக்க வேண்டும்” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir