மக்களின் ஜனநாயக உரிமை உயர்நீதிமன்றால் பாதுகாப்பு – மஹிந்த அணி

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை உயர்நீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது பலம் வாய்ந்ததொரு வெற்றியாகும். நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுவதற்கு எதிர்த்தரப்பினர் முன்னெடுத்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.”

– இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

“நாடாளுமன்றத் தேர்தலை விரைவாக நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தத் தீர்மானித்தமை ஆகிவற்றுக்கு எதிராக எதிரணியினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலனை செய்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அவற்றை முழுமையாகத் தள்ளுபடி செய்துள்ளன.

எதிர்த்தரப்பினர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் இன்று தோல்வியடைந்துள்ளன.

நல்லாட்சி அரசு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தேர்தல் உரிமையைத் தொடர்ந்து பிற்போட்டது. உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் கடந்த அரசு பிற்போட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமையவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாகாண சபைத் தேர்தலும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

எதிர்த்தரப்பினர் தங்களின் கட்சி உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து பிற்போட முயற்சி செய்தார்கள். இவர்களது முயற்சி உயர்நீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் காணப்படுகின்றது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத்தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரப் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகவும் உள்ளது. தேர்தலை நடத்துவதற்கு அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கும்” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir