இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் இன்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொசன் விடுமுறை தினங்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் அமுல்பட்டுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட உள்ளது.
அத்துடன், சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு, தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்றும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் தனிநபர்கள் மற்றும் வாகனங்கள் என்பனவற்றை பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பில் கடமையில் ஈடுபட்டுள்ள அனைத்து பொலிஸாருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு மாத்திரமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும், அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.