பேருந்து நிலையங்களில் 50 சதவீத ஆசனங்களில் பயணிகள் ஏறியதும் பேருந்துகள் சேவையை ஆரம்பிக்கவேண்டும். அதன்மூலம் தரிப்பிடங்களில் உள்ள பயணிகள் அனைவரும் பயணிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
வரும் திங்கட்கிழமை (ஜூன் 8) முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படவேண்டும் என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
பேருந்துகள் இருக்கைகளின் எண்ணிக்கையின்படி மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்வது கட்டாயமாகும், அதே நேரத்தில் அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
“முகக் கவசம் அணியாத எந்த ஒரு பயணியும் பொது போக்குவரத்து வழியாக பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கைகளை கழுவுவதற்கான வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.
கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான சுகாதார சேவை வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சுத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரத்து 300 பேருந்துகளும் மற்றும் 23 ஆயிரம் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. எனினும் பயனுள்ள பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு இந்த எண்ணிக்கை இன்னும் போதுமானதாக இல்லை என்று போக்குவரத்து அமைச்சுச் சுட்டிக்காட்டியுள்ளது.
அதனால் பாடசாலை, சுற்றுலா மற்றும் பிற சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளை தற்காலிக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தும் நோக்குடன் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.