ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 51 பேர் இலங்கையில் கைது!

இலங்கையில் இருந்து மீன்பிடி படகு வாயிலாக, ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 51 பேரை, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

நம் அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில், பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில், கிழக்கு கடல் பகுதியில், இலங்கை கடற்படையினர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, மீன்பிடி படகு ஒன்றை தடுத்து நிறுத்தினர்.

அதில், சந்தேகத்துக்கு இடமாக 51 பேர் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கடற்படையினர் கைது செய்தனர்.கடந்த ஒரு வாரத்தில், இதுபோல நான்காவது சம்பவத்தை, கடற்படை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

மேற்கு கடல் பகுதியில் உள்ள மாராவிலா என்ற இடத்தில், நேற்று முன் தினம் நடந்த சோதனையில், ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்ற 24 பேரை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த மாதம், 27 மற்றும் 28ல், ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்ற, 100க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

இலங்கை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவை, இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கான ‘விசா’ வழங்குவதாக, இலங்கை முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் தாமிகா பெரேரா அறிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir