கடந்த ஞாயிற்றுக்கிழமை (2 ஏப்ரல் 2023) தலைமன்னார் மணல் குன்று கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 4 கிலோவுக்கும் அதிகமான ICE என அழைக்கப்படும் CRYSTAL METHAMPHETAMINE எனும் போதைப்பொருளை இலங்கைக் கடற்படையினர் நீரில் மூழ்கிய நிலையில் கைப்பற்றியுள்ளனர்.
கடற்பரப்பைப் பாதுகாப்பதற்கும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்குமான விசேட நடவடிக்கையானது SLNS தம்மன்னவினால் வடமத்திய கடற்படைக் கட்டளைப் பகுதியில் மணல்மேடு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான வகையில் நீரில் மூழ்கியிருந்த சாக்கு மூட்டையை மீட்டதுடன், சாக்கில் அடைக்கப்பட்டிருந்த 4 பொதிகளில் சுமார் 4 கிலோ 500 கிராம் எடையுள்ள போதைப்பொருளையும் கண்டெடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் கடற்படையினரின் தொடர்ச்சியான ரோந்து நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களைக் கரைக்குக் கொண்டு வர முடியாமல் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு 67.5 மில்லியன் ரூபாக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொதிகள் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-T01