இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் கொள்கைச் சீர்திருத்தங்கள், நிர்வாகம், திறன் மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றில் இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக இந்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (NCGG) பணிப்பாளர் நாயகம் பாரத் லால் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை ஜனாதிபதியை கடந்த சனிக்கிழமை சந்தித்தபோது கொள்கைச் சீர்திருத்தங்கள், நல்லாட்சி, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற தலைப்புகளில் கலந்துரையாடப்பட்டதாகவும் இந்திய அமைச்சகம் மேலும் தெரிவிக்கின்றது.
“ஜனாதிபதி விக்கிரமசிங்க இலங்கைக்கான தனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்டார். சமீபத்தியப் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதற்கான மூலோபாயம் மற்றும் நாட்டை உயர் பொருளாதார வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வது, இலங்கையில் ஆளுகை மற்றும் பொதுக்கொள்கைக்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது போன்றவற்றுக்கு NCGG உதவ வேண்டும் என்றும் குறித்த சந்திப்பில் அவர் கோரியிருக்கிறார்.
திறமையான, பயனுள்ள மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பொதுச்சேவை வழங்கலை உறுதி செய்வதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையின் முக்கியப் பங்கையும், நல்லாட்சிக்கு அவர் அளித்த முக்கியத்துவமும் இந்தச் சந்திப்பில் மேற்கோள் காட்டப்பட்டது.
கொள்கைச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், திறன் மேம்பாடு, நல்லாட்சி மற்றும் நிறுவனக் கட்டமைப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு NCGG இன் ஆதரவை மையமாக வைத்து கலந்துரையாடப்பட்டது” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.