ஜனாதிபதித் தேர்தல் குறித்த பேச்சுக்களுக்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தனது எதிர்பார்ப்பின்படி அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் மாத்திரமே அவ்வாறானதொரு தேர்தலை நடத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி தனது பதவிக்காலம் தொடங்கி நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பின்னர், புதிய ஆணையைப் பெறுவதற்காக ஜனாதிபதித் தேர்தலை எந்த நேரத்திலும் அறிவிக்க முடியும். தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் (கோட்டாவின் காலத்தோடு சேர்த்து) நான்கு வருடங்கள் நிறைவடைந்த பின்னர் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்ற ஊகத்தைக் குறித்த அரசியலமைப்பு விடயமானது ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவின் பின்னர் முடிவடையாத அவரது பதவிக் காலத்தை நிறைவேற்றுவதற்காகவே தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டதாகத் தேசப்பிரிய தெரிவித்தார்.
டெய்லி மிரருக்குத் தனது கருத்துக்களைத் தெரிவித்த தேசப்பிரிய, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ராஜினாமா செய்த பின்னர், அடுத்த ஜனாதிபதி எஞ்சிய காலப்பகுதியில் பணியாற்ற வேண்டும் எனவும் தனது கருத்துப்படி அவர் திடீர்த் தேர்தலுக்குச் செல்ல முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் இடையில் விலகிய முன்னைய ஜனாதிபதிக்குப் பின் வரும் ஜனாதிபதிக்குக் கூட உள்ளது என சட்ட வல்லுனர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். இது குறித்த சரியான விளக்கத்தைப் பெற உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
T01