உலக சுகாதார தினம் – யாழ் ஆரோக்கிய நகர செயற்றிட்டம் மீதான ஓர் பார்வை

உலக சுகாதார தினமானது ஒவ்வோராண்டும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்ட தினமான ஏப்ரல் 7 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தினமானது அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமாகும் . இது உலகின் பொதுச் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் ஒன்றாகும்.

உலக சுகாதார தினமானது ஒவ்வோராண்டும் ஒரு கருப்பொருளினை மையமாக கொண்டு அனுட்டிக்கப்படுகின்றது. இந்தக் கருப்பொருளானது பிரதானமாக, சமகாலத்தில் உள்ள சுகாதார பிரச்சினைக்கான ஒரு கவனத்தையும் விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதை கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த வருடம் “அனைவருக்கும் சுகாதாரம்” என்ற கருப்பொருளினை அது மையமாக கொண்டுள்ளது .

ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. அந்த நாட்டில் உள்ள நகரங்கள் பொதுவாக முக்கிய பங்கினை வகித்து வருகின்றன. குறிப்பாக, இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் நகரங்கள் ஒரு முக்கிய பங்காகும். ஏனெனில், அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் வளர்ச்சி அடைந்துவரும் உட் கட்டமைப்பு வசதிகள் என்பன முறையான சுகாதாரத்தை அணுகுவதற்குத் தடையாக இருக்கின்றன.

உலக சுகாதார ஸ்தாபனமானது பல தசாப்தங்களாக ஆரோக்கிய நகரங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் உலக சுகாதார ஸ்தாபனதின் ஆரோக்கிய நகரத் திட்டம் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும். ஆரோக்கிய நகரம் என்பது பௌதிக மற்றும் சமூகச் சூழலினை மேம்படுத்திக் கொள்வதோடு அங்கு வாழும் மக்கள் தமது திறன்களை வளர்த்துக்கொண்டு ஓர் ஆரோக்கியம் மிக்க வாழ்க்கையைத் தாமாக ஏற்படுத்தி கொள்வதற்கு வழிபடுத்துவதொன்றாகும்.

இந்தச் செயற்றிட்டமானது பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு கணிசமான ஆரோக்கிய நகரங்களை அடையாளப்படுத்தியுள்ளது.

யாழ் மருத்துவபீடத்தின் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவ அலகின் நேரடி ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலில் யாழ் மாநகர சபை, சுகாதார சேவைகள் திணைக்களம், யாழ் மாவட்டச் செயலகம், யாழ் பிரதேச செயலகம், மாகாணக் கல்வித் திணைக்களம், மேலும் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதான ஒத்துழைப்புடன் “ யாழ் ஆரோக்கிய நகரத் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டமானது 5 பிரதான கருப்பொட்களான கழிவு முகாமைத்துவ மேம்பாடு, போசாக்கான உணவு மேம்பாடு, உடல் மற்றும் உள ஆரோக்கிய மேம்பாடு, நீர் மற்றும் சுகாதார மேம்பாடு அத்துடன் தொற்றா நோய்களுக்கான தடுப்பு என்பவற்றை நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இது 3 சுற்றுச்சூழல்களான பாடசாலை, பொது இடங்கள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றில் ஆரோக்கியத்தை மேம்படுத்திவதனை நோக்கமாக கொண்டுள்ளது.

அந்த வகையில், பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவ சுகாதார மேம்பாட்டிற்கு பிளாஸ்டிக் பாவனை அற்ற பாடசாலையை உருவாக்குவதற்க்காகப் பயிற்சிப் பட்டறைகளை இத்திட்டம் மேற்கொண்டு வருகின்றது. யாழ் மாநகர சபைக்குள் அடங்கும் 23 பாடசாலைகளில் எமது பயிற்சிகளை நடாத்தி உள்ளோம். மேலும் நீர் மற்றும் சுகாதார மேம்பாட்டின் கீழ் பாடசாலைகளில் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் எனும் பயிற்சிப் பட்டறையினை வழங்கி வருகின்றோம். அது தொடர்பான கற்றல் புத்தகங்களையும் உருவாக்கி விநியோகித்து வருகின்றோம்.

உடல் மற்றும் உள ஆரோக்கிய மேம்பாட்டிற்காகப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டிப் பாவனையை அதிகரிப்பதற்காக கடந்த வருடம் துவிச்சக்கர வண்டி விழிப்புணர்வுப் பயணம் ஒன்றை நடத்தி, தொடர்ந்து அதனை மேம்படுத்துவதற்காக மாணவர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணிப்பதற்கான சூழலை உருவாக்குவதில் ஆர்வமாக செயற்பட்டு வருகின்றோம். மேலும், பாடசாலைத் தோட்டம் என்ற எண்ணக்கரு ஊடாகவும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். பாடசாலையில் மாணவர்களின் போசணையை அதிகரித்துக்கொள்ள சுகாதாரமான சிற்றுண்டிச் சாலைகளை உருவாக்குவதற்கு திடங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இவ்வாறு நாம் எமது ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமது செயற்பாடுகளை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மேற்கொள்வதற்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம் .

நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் மட்டுமே எமது நகரை ஓர் ஆரோக்கியம் மிக்க நகராக மாற்ற முடியும். எமது நகரை ஆரோக்கியத்தின் பாதையில் கொண்டு செல்வதற்க்கான எம் ஒவ்வொருவரின் சிறிய முயற்சியும் எமது நகத்தின் ஆரோக்கியமான பயணத்திற்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியமான மக்கள்; ஆரோக்கியமான நகரம்; ஆரோக்கியமான நாடு!

கட்டுரையாளர்-

ஆர்.சுரேந்திரகுமாரன்
பீடாதிபதி,
மருத்துவபீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

You May Also Like

About the Author: digital

Leave a Reply