இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை: தூதுவர் ஜூலி ஜே.சுங்

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங் நேற்றுத் தெரிவித்தார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, அமெரிக்காவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இராணுவத் தளத்தைப் பொறுத்தவரையில் அதனை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என நான் மீண்டும் மீண்டும் கூறியுள்ளேன், எனத் தெரிவித்திருந்தார்.

சோஃபா ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவோ அல்லது மறுமதிப்பீடு செய்யவோ தனது நாட்டுக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் ஜூலி சுங் மேலும் தெரிவித்திருந்தார்.

சோஃபா ஒப்பந்தமானது, முதன்முதலில் 1995 இல் கையொப்பமிடப்பட்டது. முன்னதாக, இந்தோ-பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மைத் துணைப் பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா ரோயல் தலைமையிலான உயர்மட்ட அமெரிக்கப் பாதுகாப்புக் குழு இந்த ஆண்டு பெப்ரவரியில் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிராந்தியப் பாதுகாப்பு, இலங்கை இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாதுகாப்புக் குழுவானது, அமெரிக்க விமானப்படையின் இரண்டு சிறப்பு விமானங்களில் நாட்டை வந்தடைந்திருந்தது. இந்த விஜயம் இலங்கையில் ஒர் இராணுவத் தளத்தை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்ற ஊகத்தைத் தூண்டியிருந்தமை கவனிக்கத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply