காலைக்கதிரின் ஆசிரியர் தலையங்கம் –
இந்தப் புவி வாழ் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்த்துக்கள். மனிதனின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தப் பூமியில் உயிர்களால் தாக்குப்பிடிக்க முடியுமோ தெரியாது என்பதால் இப்போதே வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்வது முக்கியம்.
அப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. மனிதச் செயற்பாடுகளின் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக தாய்லாந்தில் இந்த வாரம் அதி உயர் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 45.4 பாகை செல்சியஸ் வெப்பம். இந்தியாவில் வெப்ப அலைகளால் இதுவரையில் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
காலநிலை அறிவியலாளர்களின் புதிய ஆய்வு முடிவுகளின்படி உலகம் 2023 அல்லது 2024இல் அதி உயர் சராசரி வெப்பநிலையைப் பதிவு செய்யும். எல்நினோ திரும்புவதால் ஏற்படும் மாற்றம் இது என்கிறார்கள் அவர்கள். இந்த நிலையில்தான் இன்று பூமி தினத்தை எதிர்கொள்கின்றோம்.
பூமி தினம் அல்லது புவிநாள் என்பது ஆண்டுதோறும் சித்திரை 22 அன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் 1970 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அதில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறுதான் புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.
அதேசமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் (Gaylord Nelson) என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்தநாளாக 1970 சித்திரை 22 இருக்கட்டும் என்று அறிவிப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.
அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் பூமி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் அவை ஆனி 5 அன்று உலக சுற்றுச் சூழல் நாளை அனுசரித்து வருகிறது. அதற்குப் புறம்பாகவே இந்தப் பூமி தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. நாம் வாழும் பூமி அனைத்து உயிர்களுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் உரியது. அதனைப் பாழாக்கி அழித்துவிட்டுச் செல்லாமல் எதிர்காலத்தினருக்கும் விட்டு வைக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.
மரங்களை வெட்டுவதை நிறுத்தி, முடிந்தவரை மரங்களை நாட்டி, பிளாஸ்ரிப் பொருட்களின் பாவனையை இயன்றவரை குறைத்து, பொலித்தீன் பாவனையை முற்றாகக் கைவிட்டு, மின்சாரப் பாவனையை அத்தியாவசியத்திற்கு மட்டும் என்றாக்கி இந்தப் பூமியைக் காப்பதற்கு எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் நாமும் மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் பூமி பாதுகாப்பானதாகவும் எதிர்காலத்தைக் கொண்டதாகவும் அமையும்.
இந்த நாளில் சுற்றுச் சூழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதேநேரம் ஆட்சியாளர்களுக்கும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். தேவையான சுற்றுச் சூழல் சட்டங்களை உருவாக்கவும் காடழிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தவும் ஆட்சியாளர்களுக்கு
அழுத்தம் கொடுக்கவேண்டும்.
மாணவர்கள் மத்தியில் சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தாம் வாழும் சூழலை சுத்தமாகவும் அதேநேரம் தூய்மையாகவும் வைத்திருக்கவும் பழக்கப்படுத்தவேண்டும்.