வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இலஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினர் எனும் பெயரில் சிவசேனை, ஐக்கிய மக்கள் சக்தியை அமைப்புகளைச் சேர்ந்த சிலரினால் இன்று காலை 10 மணியளவில் வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் ஆறு பேர் கலந்துகொண்டதோடு, ஜனாதிபதியினால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. சாள்ஸ் அவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய பதாதைகளைத் தாங்கியவாறு குறித்த ஆறு பேரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி, ஊழல்வாதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கு ஆதரவான சிலரே இந்தப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இன்று காலையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் களமிறக்கப்பட்டு வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்திற்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.