ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை அணி, குஜராத்தை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த மார்ச் மாத இறுதியில் ஆரம்பமான 70 லீக் போட்டிகளை கொண்ட 16வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.
லீக் போட்டிகள் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகள் ப்ளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற முதலாவது தகுதி காண் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை சேர்த்தது.
சென்னை அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி 60 ஓட்டங்களும், டெவன் கொன்வே 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தர்ஷன், ரஷிட் கான், நூர் அகமட் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.
இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை எடுத்து தோல்வியடைந்தது.
இதில், சுப்மன் கில் அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும் ரஷிட் கான் 30 ஓட்டங்களையும் பெற்றிந்தனர்.
இதன் மூலம், முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.