மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்; அவர்களும் பிரதிபலிப்பைக் காட்டுவார்கள் : கஜேந்திரகுமார்

பெரும்பான்மை சமூகமானது அரச அதிகாரங்களை பயன்படுத்திக்கொண்டு முற்றுமுழுதாக ஏனைய சமூகத்தினருக்கு தீங்கு ஏற்படுத்துகின்றனர். இவ்வாறான நிலைமையில் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அவர்களும் பிரதிபலிப்பைக் காட்டுவார்கள், என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டத்திற்கு முரணான வகையில் பௌத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள 15 குடும்பங்களின் உறுதி பத்திரம் உள்ள காணியே இது. இங்கு இராணுவத்தினர் அடிக்கல் வைத்த வேளை அது தொடர்பில் கேட்டபோது அவ்வாறு தனியார் காணியில் விகாரை அமைக்க முடியாது என்று அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால், அங்கே தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கடந்த 23 ஆம் திகதி நாங்கள் அங்கே போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தோம். அதன்போது பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை தாக்கியுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. பாராளுமன்ற வாரம் என்பதனால் அவரைக் கைதுசெய்வதில் சிக்கல்கள் இருந்தமையினால் அதற்குப் பதிலாக அங்கிருந்த 9 பேரை கைதுசெய்தனர். அவர்களிடையே சட்டத்தரணி ஒருவரும் இருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சட்டத்திற்கு முரணான வகையில் தாக்கப்பட்டுள்ளார். போராட்டத்தால் அங்கே இடையூறுகள் இடம்பெறுவதாகவே பொலிஸார் கூறியுள்ளனர். அவ்வாறு என்ன இடையூறு நடந்துள்ளது? சட்டத்திற்கு முரணான வகையில் தனியார் காணியில் பௌத்த விகாரையை நிர்மாணித்துள்ளார்கள். மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிராக போராடும்போது, அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களின் உரிமைகளை அழிக்கின்றன. கடந்த 75 வருடங்களாக செய்த தவறுகளை மீண்டும் செய்யமாட்டோம், என்று கூறினாலும், தொடர்ந்தும் அதனையே செய்கின்றீர்கள். அதற்கான காரணம் –  நீங்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.

தொடர்ந்தும் இவ்வாறு நடந்தால் நாடு முன்னேற்றமடையாது. இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும் நாடு இதே நிலையிலேயே இருக்கும். இதேவேளை குறித்த விடயத்தில் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் தேவையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply