குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய விசேட குழு நியமிப்பு

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் அடங்கிய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்ற நிலையில், குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், யாழ் மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில், வடக்கு மாகாண சபையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானம் ஒன்று கிடப்பில் கிடப்பதாகவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அதன் அடிப்படையில், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், யாழ்ப்பாண மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக, சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கான இணைப்பாளர், பிரதமர் செயலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் களப்பணிப்பாளர் உட்பட ஐவர் அடங்கிய குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு, நீர் விநியோகத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

நாளை மறுதினம் குறித்த விடயம் தொடர்பிலான முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளதாக சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply