உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஆரம்பமான நிலையில் ஸ்மித்தின் நிதானமான ஆட்டத்தாலும் ஹெட்டின் அதிரடி அட்டதாலும் நேற்றைய முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலியா அணி பலம் வாய்ந்த நிலையில் உள்ளது.
இரண்டாவது பருவத்திற்கான (2023) ஐ.சி.சி (ICC) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நேற்று புதன்கிழமை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.
இரண்டாவது பருவத்திற்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் தெரிவாகியிருந்தன.
வாண வேடிக்கைகளுடன் ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 327 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
ஆரம்ப வீரர் உஸ்மான் க்வாஜா ஓட்டம் எதனையும் பெறாமல் மொஹமட் சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்திருந்தார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய டேவிட் வோர்னர் மற்றும் மார்னஸ் லபுசேன் இருவரும் 2 ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர்.
வோர்னர் 43 ஓட்டங்களுடனும் லபுசேன் 26 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்க 76 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை இழந்திருந்தது அவுஸ்திரேலியா.
இருப்பினும், அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் எவ்வித சிரமுமின்றி துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை சரமாரியாக பெற்றவண்ணம் இருந்தனர்.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட் 156 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 146 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
மறுபக்கத்தில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள் அடங்கலாக 95 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
இந்திய அணி சார்பில் மொஹமட் சிராஜ் 67 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஷர்துல் தாகூர் 75 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மொஹமட் ஷமி 77 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.