உலக அளவில் ஜூன் மாதம் சுயமரியாதை மாதமாக கொண்டாடுகின்ற நிலையில் யாழ் திருநர் வலையமைப்பு இணைந்து நடத்தும் இவ்வாண்டுக்கான ” யாழ் சுயமரியாதை வானவில் பெருமிதம் 2023 ” (Jaffna Pride 2023) என்ற சுயமரியாதை மாத நிகழ்ச்சிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் “பெருமிதத்தின் வண்ணங்களின் ஒருங்கிணைவு” என்ற கருப்பொருளுடன் இவ்வருட யாழ் சுயமரியாதை வானவில் பெருமித மாதத்தைக் கொண்டாடவுள்ளதாக குறித்த நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பெருமையின் நிறத்தைக் கொண்டாட இந்த ஜூன் மாதத்தில் தங்களுடன் இணைந்துகொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ் சுயமரியாதை வானவில் பெருமிதம் 2023 நிகழ்ச்சியின் ஓர் அங்கமான சுயமரியாதை நடை எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
யாழ் பேருந்து நிலையம் முன்பாக காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த நடைப்பயணம், முதலில் சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, பொது நூலக வீதி, வைத்தியசாலை வீதி ஊடாக சென்று ஆரிய குளத்திற்கு முன்பாக நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், சமூகத்தில் வாழும் அனைவருமே சமூகப் பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன், அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன், ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமான இந்த நிகழ்வுகளில் குரல்கொடுக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
” யாழ் சுயமரியாதை வானவில் பெருமிதம் 2023 ” நிகழ்ச்சி நிரல்